×

செயற்கை நுண்ணறிவு பாடம் 100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாடம் 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்ட TEALS திட்டம் அறிமுகம் செய்யும் செய்யும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே முதல் முறையாக இங்குதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் 13 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம் 100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும். 17 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற 34 லட்சம் மாணவ, மாணவியர் தினமும் காலை சிற்றுண்டி பெறுகின்றனர். கல்விதான் முக்கியம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இருப்பினும் விளையாட்டு பாட வேளையில் ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடவும் அனுமதிக்க வேண்டும். எந்த அளவுக்கு கல்வி முக்கியமோ அந்த அளவுக்கு விளையாட்டும், உடற்பயிற்சியும் முக்கியம்’’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே முதன்முறையாக மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை அறிமுகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுதான் செய்துள்ளது. இந்த ஆண்டு 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேனிலைப் பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் பாடத்தை மற்ற வகுப்புகளுக்கும் கொண்டு வர அரசு முயற்சி எடுக்கும். தற்போது இடைநிலை ஆசிரியர்கள் 1700 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். நிதித்துறை அனுமதி அளித்த அளவுக்கு இப்போது தேர்வு செய்ய இருக்கிறோம். ஏற்கனவே பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் கணினி ஆசிரியர்களையும் பணியில் எடுக்க அரசு முயற்சி எடுக்கும். தற்போதுள்ள கணினி ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post செயற்கை நுண்ணறிவு பாடம் 100 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,TEALS ,School Education Department ,Anpil Mahesh ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...